சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை வழியாக கேரளாவிற்கு சட்ட விரோதமாக புகையிலை, குட்கா, ரேஷன் அரிசி போன்றவை கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரிலிருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் சட்ட விரோதமாக 2 டன் ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதுவை கைது செய்ததோடு, ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.