பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்திலுள்ள மோதிஹாரி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் நேற்று முன்தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. இதில் மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரிக்கு 400 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வந்தனர். அப்போது அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகமானது மாணவர்களை சமாதானம் செய்து தேர்வு எழுதுவதற்காக அழைத்து வந்தனர். வழக்கமாக தேர்வு 1.45 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு முடிவடைய வேண்டும். ஆனால் போராட்டத்தினால் தேர்வு 4 மணிக்குத் தான் தொடங்கியது. அதன்பின் 6 மணிக்கு இருட்டத் தொடங்கியதும் தான், கல்லூரியில் மின்சார சேவையே இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கல்லூரி சார்பாக ஜெனரேட்டர் கொண்டு வந்தாலும், அது அனைத்து வகுப்புகளுக்கும் போதவில்லை.
இதனால் மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர் தங்களது கார், இருசக்கர உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு, அதில் அமர்ந்து மாணவர்களை தேர்வெழுத வைத்தனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. இச்சம்பவம் பல்வேறு தரப்பினரும் புகார் அளித்ததை அடுத்து, மாவட்டக் கல்வி நிர்வாகம் சார்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..