மினி பஸ் ஓட்டுனர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம்-திசையன்விளை செல்லும் மினி பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இதே போன்று மருதநாட்சிவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் மற்றொரு மினிபஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூச்சிக்காடு பகுதியில் 2 மினிபஸ்களும் பக்கவாட்டில் மோதியதில் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக ஓட்டுனர்கள் மணிகண்டன், சுபாஷ் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் தட்டார்மடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மருதனாட்சிவிளை பகுதியில் வசிக்கும் சுபாஷ், சதீஷ்குமார், அந்தோணி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சுபாஷ் அளித்த புகாரின் மணிகண்டன், பாலச்சந்திரன் ஆகிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.