தி.மு.க பிரமுகர் தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கவிளை பகுதியில் சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க-வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் டிபுரோகிலி பெங்களூருவில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அங்கேயே ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை விபத்தில் டிபுரோகிலி இறந்துவிட்டார்.
இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து எந்த தொழிலிலும் ஆர்வம் காட்டாமல், அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிபுரோகிலியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்று மகனின் கல்லறையில் அழுது கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சகாயமும், சுகந்தியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன் மனைவி இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் சகாயம் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் எங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் மகனை இழந்த வேதனையை தாங்கி கொள்ள முடியாமல் இருக்கிறோம். எனவே மகன் சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.