தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலியானதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள செங்குளம் கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் செங்குளத்தில் இருந்து மயிலாடும்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டனை அருகே உள்ள வருசநாடு-தேனி சாலையில் சென்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக முத்துபாண்டியின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் முத்துபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த தனியார் பேருந்து ஓட்டுநர் சந்திரன் உடனடியாக பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு, கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதற்கிடையே முத்துப்பாண்டியன் உறவினர்கள் மற்றும் செங்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு முத்துப்பாண்டியன் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி பேருந்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடமலைகுண்டு, வருசநாடு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் முத்துபாண்டிக்கு தனியார் பேருந்து சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பின்னும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.