முக்கிய நபரை மூன்று நாட்கள் விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி பஞ்லிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நபர்கள் தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி அவரிடமிருந்து 15 லட்ச ரூபாய் பணம், ஆதார் கார்டு, செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமி, ஆனந்த், தியாகராஜன், பிரவீன்குமார், மோகன்குமார், சதீஷ் மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மேத்யூ என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க பொள்ளாச்சி நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவினை விசாரித்த நீதிபதி மேத்யூவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் ரகசிய இடத்தில் வைத்து மேத்யூவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.