உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் பணியாளர்கள் வீட்டிலிருந்து கொண்டே இ-மெயில், இணையதளம், தொலைபேசி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு “டெலிவொர்க்கிங்” என்று பெயர். ஆனால் இப்படி டெலிவொர்க்கிங் முறையில் வேலை பார்த்தால் மனநல பாதிப்பு, நிலையான மன உளைச்சல், சமூக தனிமை, முதுகுவலி, தனிமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் நீண்ட நேரம் தொலைதூரத்திலிருந்து கணினியில் வேலை செய்தால் கண் அழுத்தம், தசையில் காயங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்றும் WHO எச்சரிக்கிறது. அதேபோல் பணி விருப்பங்களை பொருத்து ஒருவருடைய மன நிலையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் சக ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே அதிக எண்ணிக்கையிலான மோதல்கள் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.