டேங்க் ஆப்பரேட்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்தப்பா அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது முத்தப்பா 2 நாட்களுக்கு முன்னரே வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக முத்தப்பா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.