பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் கடவாய் பற்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காந்தி சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத் யானையின் கடவாய் பற்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது, மம்மூத் யானையின் கடவாய் பல்லை தொல்லியல் ஆர்வலர் சுகவனம் முருகன் கண்டெடுத்து அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். இந்த இனம் 50 லட்சம் ஆண்டுகள் முதல் 4 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்தவை ஆகும்.
இந்நிலையில் நீளமான தந்தமும், முடியும் உடைய மம்மூத் யானை இனம் அழிந்துவிட்டது. இந்த யானைக்கு மொத்தம் 26 பற்கள் இருந்துள்ளது. ஒரு யானைக்கு தன் வாழ்நாளில் 6 முறை புதிய கடவாய் பற்கள் தோன்றும். கடவாய் பற்கள் ஒவ்வொன்றும் செங்கல் அளவில் சுமார் 2 கிலோ எடையுடன் காணப்படும். இதில் ஆண் யானையின் தந்தம் பெரிதாகவும், பெண் யானையின் தந்தம் சிறிதாகவும் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.