பாரம்பரியமிக்க கடைவீதிகள், பாசம்மிக்க மனிதர்கள், உலகப்புகழ் மீனாட்சி கோவில், வந்தாரை வரவேற்கும் வைகை காற்று என அழகே வடிவானது மதுரை மாநகரம். சென்னைக்கு அடுத்து அதிக வார்டுகளை கொண்ட இரண்டாவது மாநகராட்சி.
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பரப்பளவை கொண்ட மாநகராட்சி இந்த மதுரை மாநகராட்சி. ஆணையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற நகராட்சிகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சி மொத்தம் நான்கு மண்டலங்களை கொண்டது.
ஆண்டுக்கு சுமார் 586 கோடி வரி வசூல் செய்து தமிழக வரிவசூல் வருவாயில் மூன்றாவது இடத்தில் உள்ளது மதுரை.
1971ஆம் ஆண்டு நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட மதுரை மாநகராட்சி, 1978 ஆண்டு தனது முதல் மாநகராட்சி தேர்தலை சந்தித்தது.
அதன் பிறகு இதுவரை 1996, 2001, 2006, 2011 என ஐந்து முறை மாநகராட்சி தேர்தலை சந்தித்து உள்ள மதுரையில், 3 முறை மேயர் பதவிக்கு திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
தற்போது மதுரையில் மக்கள் தொகை அதிகரித்து உள்ள நிலையில், அதற்கு ஏற்ப கட்டமைப்புகளை மேம்படுத்தபடவில்லை என்பதே இந்த மண்ணின் முதல் வேதனையாக உள்ளது.
மொத்தமுள்ள 100 வார்டுகளில் 50 சதவீத வார்டுகளில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுவதாகவும் சொல்கிறார்கள் மதுரை மக்கள்.
முல்லை பெரியாறு அணை மூலம் குடிநீர் விரிவாக்க திட்டம், பெரியார் பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம் என அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் மதுரை வாசிகள்.
வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் மதுரையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மதுரை மக்களின் எதிர்பார்ப்பு.