பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து ஜெ.ஜெ. நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இறந்து கிடந்த கோபிநாத் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் கோபிநாத், தொலைக்காட்சி சீரியல் நடிகையும் தொகுப்பாளினியுமான ரேகா என்பவரின் கணவர் என்பதும், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், கோபிநாத்திற்கும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் நேற்றும் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்திற்குச் சென்று வருவதாக கிளம்பிய கோபிநாத், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.