புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் 4 பேரை விடுவிக்க சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி ஈழத்தாயகத்தின் முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் மற்றும் முகமது கலில் ஆகிய மீனவர்கள் 4 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்து இரண்டு மாதங்களை தாண்டி சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் மட்டக்களப்பிலிருந்து மீன்பிடிக்க சென்றவர்கள், படகில் இயந்திரம் பழுதான காரணத்தால் சாப்பாடின்றி மூன்று வேளையும் பச்சை மீனை சாப்பிட்டு இருக்கிறார்கள். கடல் நீரை குடித்த போது நடுக்கடலில் தத்தளித்தனர். இந்நிலையில், 62 நாட்களுக்குப்பின் காற்றினால் படகு கரை ஒதுங்கியது.
அப்போது சென்னை எண்ணூர் துறைமுக காவலர்கள் அவர்களை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். மீனவர்கள் 4 பேரும் படகு இயந்திரத்தின் பழுது காரணமாக தமிழகத்தின் எல்லைப் பகுதியில் கரை ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது.
எனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களான இஸ்லாமிய மீனவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து நாட்டிற்கு திரும்ப அனுப்பி, அவர்களின் குடும்பத்தார் கண்ணீரை துடைக்க உடனே நடவடிக்கை செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.