மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு கவுள்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது சறுக்கு பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அருகில் உள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து மருவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விக்னேஷின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.