மனைவியின் தங்கையை திருமணம் செய்து தர கேட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மேலும் திருமணமான 4 மாதத்தில் எனது கணவர் கோபிநாத், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் என்னை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் எனது குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததால் பெற்றோர் சொத்தை எழுதி வாங்கி தர சொல்லி தினமும் அவர்கள் என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி என்னை அவர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனால் தற்போது நான் எனது பெற்றோர் வீட்டில் உள்ளேன். அதன் பிறகும் கோபிநாத் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்து நகை, பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முழு சொத்தையும் அபகரிக்கும் விதமாக என் தங்கையே தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என மிரட்டி வருகிறார். எனவே எனது கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேஸ்வரி புகார் மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.