நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்து வருகின்றனர் சில அரசியல் கட்சியினர்.
சமூகப்பணிகளில் திருநங்கைகளுக்கான வாய்ப்பு அரிது என்ற காலம் மலையேறி, அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் அரசியல் கட்சிகள். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக சார்பில் திருநங்கைகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக திருநங்கை கங்கா களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர் மாநகராட்சி 3-வது மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததோடு, தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இதைப்போல அதிமுக சார்பில் சென்னை கோடம்பாக்கம் 112-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ஜெயதேவி களமிறக்கப்பட்டுள்ளார். 2008 முதல் அதிமுகவில் பயணித்து வரும் ஜெயதேவி முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார். வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என கூறும் அவர்,
வார்டு மக்களை எனது குடும்பமாக நினைத்து உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 2008இல் நான் முழுமையாக திருநங்கையாக மாறியதற்கு பிறகு நான் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தேன். உறுப்பினராக சேர்ந்த பிறகு 2009-ல் பாசறை பகுதி துணை செயலாளராக ஒரு 50 பேர் போடுவார்கள் ஒரு தொகுதிக்கு, அந்த மாதிரி போடும் போது எனக்கும் போட்டார்கள். மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்கனவே 10 வருடமாக தலைவியாக இருக்கிறேன். 3விதமான குழுக்கள் இருக்கிறது அதனால் பெண்கள், ஆண்களுடன் பேசுவதற்கு எந்த ஒரு கூச்சமும் இல்லை. அதே போல அவர்களும் அதுபோன்று பார்த்ததில்லை.
இந்த வார்டுக்கு நான் ஒரு செல்ல பொண்ணு. இதேபோல சென்னை திரு வி க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 76-வது வார்டு பாஜக வேட்பாளராக திருநங்கை ராஜம்மா போட்டியிடுகிறார். 10 ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகிக்கும் ராஜம்மா வடசென்னை மாவட்ட கலை கலாச்சாரப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஐந்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன். நான் வந்து மருத்துவமனையில் காண்டிராக்ட் பணி செய்து கொண்டிருந்தேன். 76-வது வார்டில் எனக்கு கவுன்சிலர் சீட் கொடுத்திருக்கிறார்கள். என்னை வெற்றி பெற வைத்தால் இங்கிருக்கிற பகுதி மக்களுக்கு நான் தேவையானதை செய்து கொடுப்பேன். தேர்தலில் போட்டியிட திருநங்கைகளுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என அரசியல் விமர்சகர்கள் சிலாகிக்கப்படுகிறது.