நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். வாக்காளராகவும், மாநகராட்சி பகுதியை சேர்ந்தவராகவும் ஒருவர் கூறுகையில், 55 வார்டு பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த மூன்று வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பார்த்தீர்கள் என்றால் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது, பேட்டையில் ஆரம்பித்து கேடிசி நகர் வரைக்கும் ஒரே ரோடுதான், சுற்றுப்புற ரோடுகள் எதுவும் கிடையாது.
இந்த ஒரு ரோடு சரி செய்வதற்கு கூட மாநகராட்சி மெத்தனப் போக்கு தொடர்ச்சியாக காட்டிக்கொண்டு இருக்கிறது. இங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் ஒரு கிலோ மீட்டரை கடப்பதற்கு 10 நிமிடம் ஆகிறது. தொடர்ச்சியாக பிரச்சினைகள் இருக்கிறது, எந்த சாலையிலும் மக்கள் பயணிக்க முடியவில்லை.
இதே போல மாநகராட்சி பகுதியில் இருக்கும் ஒரு பெண் வாக்காளர் கூறுகையில், இங்கு இருந்துதான் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனால் எங்க ஏரியாவில் தண்ணீர் வசதியில்லை, ஆற்றங்கரை ஓரமாக இருக்கிறோம் என்று தான் பெயர் ஆனால் தண்ணீர் எங்களுக்கு கிடப்பது இல்லை. எங்கள் பகுதியை பொருத்தவரையில் தண்ணீர் வருவது கிடையாது, எப்பயாவது ஒரு நாள் தான் வருது அதிலும் கூட்டத்தை பார்த்தால், ஒரு குழாய் தான் இருக்கு, அந்த குழாயில் தான் அத்தனைபேரும் தண்ணீர் பிடிக்க வேண்டியிருக்கிறது.