Categories
அரசியல் மாநில செய்திகள்

கால் சிலம்பை கையில் ஏந்தி, கண்ணகி தோற்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பெண்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றோடு  முடிந்த நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேச்சைகள் விறுவிறுப்பாக மனுதாக்கல் செய்து செய்தனர்.

கோவை மாநகராட்சி 32 வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரன் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில் குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் தான் வெற்றிபெற்றால் குதிரையை போன்று வேகமாக ஓடி ஆடி மக்களுக்கு உழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சங்கனூர் எங்கள் பூர்வீக ஊர் 32-வது வார்டு சுயேச்சை வேட்பாளராக நிற்கிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதனால் குதிரையில் வந்தோம் என்றால் நல்ல ஒரு வாகனமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

பெட்ரோல் – டீசல் உயர்வினால் குதிரை கழுதையில் வரலாம். மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் எம்பிஏ பட்டதாரி பெண் கால் சிலம்புடன் கண்ணகி தோற்றத்தில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுரை மாநகராட்சி 78-வது வார்டில் போட்டியிடும் இவர் செய்யாத தவறுக்கு கோவலன் தண்டிக்கப்பட்டதற்கு கண்ணகி நீதி கேட்டதை நினைவுபடுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நீதி கேட்கும் வகையில் கால் சிலம்பை கையில் ஏந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்லடம் நகராட்சியில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் மாலதி யுவராஜ் கைக்குழந்தையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் பல்லடம் நகராட்சி 18-வது வார்டில் போட்டியிடுகிறார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நாகூர்மீரான் கொசு ஒழிப்பு புகை தெளிப்பானை பயன்படுத்தியபடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போதே மக்கள் பணி ஆரம்பித்துவிட்டதன் அடையாளமாக கொசு தெளிப்பானை பயன்படுத்திய படியே வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

நாகூர் மீரான் கடந்த முறை இதே பாணியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் திமுக வேட்பாளர்கள் இரண்டு பேர் கலைஞர் மற்றும் கட்சி தலைவர் ஸ்டாலின் வேடம் அணிந்து ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 18 வார்டில் போட்டியிடும் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக அதிருப்தி வேட்பாளர் ஒற்றை மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் பாலக்கரையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நீதிபதி தலைமையில் தலைப்பாகை அணிந்து ஒரு கையில் வாள் போன்று கைத்தடியும், மறுகையில் வாழைப்பூவையும் ஏந்தி வேட்புமனு தாக்கல் செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். வாழையடி வாழையாக மனித குலம் செழிக்க பாடுபட போவதாக உறுதி மொழி கூறி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |