மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் பிபிஏ முடித்த 22 வயதான ரிஷி திமுக சார்பில் களமிறங்குகிறார். நகராட்சியின் 19வது வார்டில் போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமது வெற்றியை கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பேன் என்றும் கூறுகிறார் ரிஷி.
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த கட்சியில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், நான் சரியாக பயன்படுத்தி செயல்படுவேன் வெற்றியை கொண்டுபோய் தமிழக முதல்வருக்கு சமர்ப்பிப்பேன். இதேபோல் கள்ளகுறிச்சி நகராட்சியில் 21 வயதான பட்டதாரி இளைஞர் அஸ்வினுக்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் கல்லூரி படிப்பை முடித்த 22 வயதான ஜூடிக் என்ற பெண்ணை அதிமுக களமிறக்கியுள்ளது. இவர் 21-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
32 வயதான இவரது அண்ணன் ஜெகன்ராஜ் 22-வது வார்டு அதிமுக சார்பில் களம் இறங்கியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போ 21-வது வார்டில் அதிமுக சார்பில் நான் போட்டியிடுகிறேன். அதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறேன். எனது அண்ணன் 22-வது வார்டில் அதே கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அண்ணனும், தங்கச்சியும் ஆக நாங்கள் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம்.
வேலூர் மாநகராட்சியில் 28-வது வார்டில் களம் காண வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் திமுகவை சேர்ந்த மம்தாவிற்கு வயது 22 மட்டுமே. பிஎஸ்சி வேளாண்மை இறுதி ஆண்டு படித்து வரும் இவர் தேர்தலில் வெற்றி பெற்று நவீன முறையிலான விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போவதாகக் கூறுகிறார். திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் களமிறக்கி இருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.