2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் வரிவிலக்கு சலுகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பண்டோபாத்தியா கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 14 சதவிகிதம் பிடிக்கப்பட்டு அது என்.பி.எஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் மாநில அரசும் தன்னுடைய ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதத்தை பிடித்து அதனை ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரவு வைக்கிறது. இதற்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வரிவிலக்கு சலுகை உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசு ஊழியர்கள் பெறும் வரிவிலக்கு சலுகை 10 ல் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்.” என அவர் கூறினார்.