நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதாவது, மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை எப்படி திருப்பி அனுப்ப முடியும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி வழங்க திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்த நிலையில், அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். இதற்கு பதில் கூறிய வெங்கையா நாயுடு, கேள்வி நேரம் தேவை இல்லை என்றாலும் பரவாயில்லை திமுகவின் கோரிக்கையை விவாதம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்த செயல் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டி திமுக எம்.பி-கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அதன்பின் ஆளுநரை கண்டித்து திமுக எம்.பி-கள் அவையை விட்டு வெளி நடப்பு செய்தனர். இவ்வாறு திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் பணியில் உள்ள ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதாக கூறினார்.