தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது,
# பாத யாத்திரை, சாலையில் நிகழ்ச்சி, சைக்கிள், மோட்டார் வண்டிகள் ஊர்வலம் போன்றவை பிப்ரவரி 11, வரை தடை செய்யப்பட்டுள்ளது.
# அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் (அ) தேர்தல் குறித்த எந்த ஒரு குழுவும் ஊர்வலங்களாக செல்ல 11/02/2022 வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
# எனினும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும் வகையில், அவ்வப்போது வாக்கு சேகரிக்கும் காலத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பேரணி நடத்த மீள ஆய்வு மேற்கொள்ளும்.
# உள்ளரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக 500 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் (அ) உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 சதவீத பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
# உள்ளரங்குக் கூட்டம் நடத்தப்படும் போது மாவட்ட தேர்தல் அலுவலரால் தேர்தலின்போது கொரோனா தடுப்பு குறித்த பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலரிடம் இருந்து உரிய சான்று வழங்குவதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
# வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களின் எண்ணிக்கை வரையறையை உயர்த்தி பாதுகாவலர்கள் நீங்கலாக 20 பேர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
# தேர்தல் நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும், பொதுமக்களும் கொரோனா கட்டுப்பாடு குறித்த நடத்தை முறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
# கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வெளியிட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த தேர்தலை தொற்று பரவல் இல்லாத தேர்தலாக நடத்திட அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.