பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் “தாலிக்கு தங்கம்” திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த தாலிக்கு தங்கம் திட்டம் ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ என்ற பெயரில் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
தமிழக அரசால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்த மணப் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 25,000 பணமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதேபோல் 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்த பெண்களுக்கு ரூ.50,000 பணமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் எஸ்டி பிரிவை சேர்ந்த பெண்கள் மட்டும் 5-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
தாலிக்கு தங்கம் பெறுவதற்கான நிபந்தனைகள் :-
* மணப்பெண் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
* ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர் ஆவார்.
* குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72,000-க்கு கீழ் இருக்க வேண்டும்.
* திருமணம் ஆவதற்கு 40 நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பிப்பவர்கள் வீட்டில் யாரும் அரசு பணியில் இருக்க கூடாது.