தந்தையிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் 2 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். மதுக்கடை நடத்தி வரும் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், அசோக்குமார், கார்த்திகேயன், குரு ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் குருவுக்கு மது பழக்கம் இருப்பதால் அடிக்கடி தந்தையின் மதுக்கடைக்கு சென்று மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று குரு வழக்கம்போல குமாரபாளையம் சாலையில் உள்ள தனது தந்தையின் மது கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது ஆனந்தனுக்கும் குருவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனந்தனின் மற்ற 2 மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற மூத்த மகன் அசோக்குமார் மற்றும் இரண்டாவது மகன் கார்த்திகேயன் ஆகியோர் தகராறு செய்த குருவை கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் அருகில் கிடந்த கற்கள் மற்றும் மது பாட்டில்களை எடுத்து குருவை தாக்கியுள்ளனர். இந்த தகராறில் படுகாயமடைந்த குரு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த குருவை அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குரு உயிரிழந்தார்.
இதற்கிடையே தப்பியோடிய அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் குமாரபாளையம் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தம்பியை கொலை செய்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.