தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் குடும்பத்துடன் கண்டன பேரணி நடைபெற்று வருகின்றது
சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாளுக்குநாள் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்று வருகின்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஆலந்தூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த பேரணி ஆளுநர் மாளிகையை நோக்கி செல்வதாக இருந்தது. இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆலந்தூர் நீதிமன்றம் அருகே பேரணி நடைபெற்று வருகிறது. மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.