பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 74,000 ரூபாயை உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலின் விதிமுறைகளின் படி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் ரூ.74,500 இருப்பது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தை ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பணத்தின் உரிமையாளர் திருப்பாலைக்குடியை சேர்ந்த வேலு, தனது குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு பொருள்கள் வாங்குவதற்கு பணத்தை எடுத்துச் வந்ததாகவும், அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் திருமண பத்திரிக்கை காண்பித்த பின்னரே அதிகாரிகள் பணத்தை அவரிடம் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.