வாக்குசீட்டில் ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு பதில் மாற்று சின்னம் ஒதுக்கப்பட்டதால் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டில் வேறு சின்னம் மாறியிருந்ததையடுத்து, அங்குள்ள வாக்குச்சாவடி எண்.185, 186, 187, 188, 189, 190, 192, 194, 195-ல் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தலை மட்டும் ரத்து செய்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான மறு தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஊத்தங்கரை ஒன்றிய 21 வது வார்டுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட லலிதாவுக்கு கைப்பை சின்னம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று தேர்தலின்போது வாக்குச்சீட்டில் கைப்பைக்கு பதிலாக பெண்கள் பயன்படுத்த கூடிய ‘ஹேண்ட் பேக்’ சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு ஒருமணிநேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தது. பின்னர் வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து வழக்கு தொடர உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.