Categories
தேசிய செய்திகள்

”நிலம் கொடுக்க மாட்டோம்”…. 3 நகர கனவுக்கு மண்ணை அள்ளி போட்ட மக்கள்…. அதிர்ச்சியில் ஜெகன்

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரை உருவாக்கும் முடிவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும்போது ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தானது புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆந்திராவின் முகமாக அறியப்பட்ட ஹைதராபாத்தை இழந்தது ஆந்திர அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அம்மாநில மக்களுக்கும் அதை ஏற்றுக்கொள்வதில் உள்ள கடினம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

இந்தச்சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு அளித்த அறிக்கையில், அமராவதியை மூன்று தலைநகர்களாகப் பிரிக்கும் முடிவை பரிந்துரைத்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும் கர்னூல் நீதித்துறை தலைநகராவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார்.

ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். பத்தாவது நாளாக நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த வேளையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று தலைநகராக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்டன் கன்சல்டிங் என்ற ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அது வந்த பின் அமைச்சரவை கூடி நல்ல முடிவு எடுக்கும் எனவும் அம்மாநில அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “ஜி.என். ராவ் குழு அறிக்கையை ஆராய உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு ஜனவரி மாதம் பாஸ்டன் கன்சல்டிங் நிறுவனம் அளிக்கும் அறிக்கையையும் ஆராயும். உயர்மட்ட குழு முழுமையாக ஆராய்ந்து சில ஆலோசனைகளை வழங்கும். அதன்படி மீண்டும் அமைச்சரவை கூட்டப்பட்டு நல்முடிவு எட்டப்படும். அனைத்துப் பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் விருப்பம். அமராவதியை மேம்படுத்த அதனை சட்டப்பேரவை தலைநகராக்குவதில் அவர் உறுதியாக உள்ளார்” என்றார்.

Categories

Tech |