தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 15 வார்டுகளுக்கும் 45 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 1, 10, மற்றும் 11 போன்ற 3 வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், 1வது வார்டில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துச்செல்வி, 10 வது வார்டில் போட்டியிட்ட ஜெயராமன், 11 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விமலா, ஆகிய 3 பேரும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் போட்டியின்றி 2 பெண்கள், 1 ஆண் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்ட 3 வார்டுகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பாக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சையாக 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது இரு கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.