ஸ்ரீ ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியிலுள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி முதல் வருகிற 14ஆம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெறும்.
வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல்வேறு படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம் போன்றவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சிலை ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீசின்ன ஜீயர் சாமிகளால் பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுடமை ஆக்குகிறார். நிகழ்ச்சியில் ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் தொடர்பான 3D விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் சிலையைச் சுற்றியுள்ள 108’திவ்ய தேசங்களின் மாதிரிகளை மோடி பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐதராபாத்தில் ராமானுஜர் சிலை திறந்ததை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிலை திறப்புக்கு நேரில் அழைப்பு விடுத்த த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமனுஜ ஜீயருக்கு முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.