கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தும் எண்ணம் இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கடந்த வாரம் முதல் ஒட்டாவாவில் கட்டாய தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினரை பயன்படுத்தலாம் என நகர காவல்துறை தலைவர் கூறியிருந்தார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வியாழக்கிழமை கூறியதாவது, “ஒட்டாவாவில் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தும் எண்ணம் இல்லை.
இதுவரை யாரும் இது போன்ற கோரிக்கைகளை முன்வைக்க வில்லை. அதோடு ஒட்டாவா நகர நிர்வாகிகளிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.” எனக் கூறினார். இந்நிலையில் போராட்டத்தை புகழ்ந்து பேசிய மற்றும் போராட்டக்காரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சில எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டுமென ஒட்டாவா மேயர் கூறியுள்ளார். அதோடு போராட்டத்தின்போது கனடாவின் நினைவிடங்கள் கொச்சைப்படுத்த பட்டதாகவும் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.