திருநெல்வேலி ராதாபுரம் தாலுகாவிலுள்ள வள்ளியூர் கலையரங்கு தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் சுமார் 150 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு வகுப்பறை திடீரென வட்டார கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அங்கு மாணவர்கள் நுழைய தடை விதித்ததாகவும், விரட்டி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, விரைவில் மாணவர்களுக்கு வகுப்பறையை வழங்குவதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.