ஜனவரி 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பிரதமர் மாணவர்களுக்கு தேர்வு குறித்து உரையாற்ற உள்ளார். பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்ற தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவர்களுக்கு தேர்வு குறித்துதான் பிரதமர் உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தே வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதனால் ஏற்கனவே அறிவித்த பொங்கல் விடுமுறை தொடரும். இது தொடர்பாக போராட்டங்கள் தேவை இல்லை” என்றார்.