நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தில் 3 பேர் மட்டுமே ஈடுபட வேண்டும் என அலுவலர் எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் எம். பிரதீப் குமார் மற்றும் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்துள்ளார்.
இதில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் பிரதீப் குமார் கூறியதாவது, இம்மாவட்டத்தில் வாக்குச்சாவடி விவரங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகள் விவரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுவது, அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மண்டல அலுவலர் நியமித்தல், வாக்குப்பதிவு பொருட்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் பணிகளை சரியாகவும், மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடத்த வேண்டும்.
இதனை அடுத்து வாகனத்தில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது எனவும், 3 நபர்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும், வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமாறு அவர் கூறியுள்ளார்.