தமிழ்நாடு சிறிய சோப் மற்றும் டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக “சோப் தயாரிப்பில் நவீன முறைகள்” குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தொடங்கி வைத்த இதில் சோப், டிடர்ஜெண்ட் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், கருவிகள் தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட சோப் உற்பத்தியாளர்கள், ஆண்டுக்கு 7% வளர்ச்சியை இத்துறை சந்தித்து வருவதாகவும், பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும் இச்சந்தையில் தாங்களும் போட்டிப்போட்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறினர். நிகழ்ச்சியில் பேசிய ஹன்ஸ் ராஜ் வர்மா, “நாட்டின் 60% சிறு நிறுவன சோப் தமிழ்நாட்டில்தான் உற்பத்தியாகிறது. இங்குள்ள நிறுவனங்கள் வெறும் சோப் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தாமல், மாறிவரும் காலச சூழலுக்கு ஏற்ப ஆரோக்கியம், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் இத்துறை வளர்ச்சி பெறுவதுடன் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
தற்போது போதிய அளவுக்கு திறன் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துவருகிறது. இதனை சரிசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்திவருகிறது. தொழில் முனைவோரை ஊக்குவித்து அதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சி எடுத்துவருகிறோம்” என்று கூறினார்.