கன்னியாகுமரி- மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரசை வரும் ஏப்ரல் மாதம் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அந்த ரயில் புனே வரையிலும் மட்டுமே இயக்கப்படும் என்பதால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி- மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் இந்த ரயிலை குமரி மக்கள் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதி மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ரயிலின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த ரயிலை முன்பு போன்று தினசரி இயக்கிட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே போர்டு மீண்டும் இந்த ரயிலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் இயக்கிட திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், இந்த ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ரயிலை முன்புபோன்று மும்பை வரையிலும் இயக்க வேண்டும் என்று மனு அனுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்க பொதுசெயலாளரான அப்பாத்துரை கூறியிருப்பதாவது, தென் மாவட்டம் மக்கள் மும்பைக்கு செல்வதற்கு ரயில்கள் மிக குறைவு ஆகும். நெல்லையை பொறுத்தவரையிலும் இன்று வரையிலும் மும்பை செல்வதற்கு தினமும் ரயில்கள் இல்லை. இந்த நிலையில் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரசை புனே வரை மட்டுமே இயக்குவது என்பது பயணிகளை பாதிக்கும். மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 47 வருடங்களாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது அந்த ரயிலை புனேயில் நிறுத்துவது தமிழர்களின் உரிமைகளை பறிப்பதாகும். புனேயில் ரயில் நிறுத்தப்படும் போது, அங்கிருந்து பயணிகள் வேறு ரயில்களை பிடித்து மும்பை செல்ல வேண்டியது வரும். ஆகவே அந்த ரயிலை முன்பு போன்று மும்பை வரையிலும் இயக்க அனுமதிக்க வேண்டும். முன்பே ஹபா உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மும்பைக்கு புறநகர் பகுதிகள் வழியாக செல்வதால், பயணிகள் மாற்று ரயில்களை பிடிக்க வேண்டியதுள்ளது. எனவே கன்னியாகுமரி -மும்பை எக்ஸ்பிரசை பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும்” என்று கூறினார்.