தமிழகத்தில் ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால், பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிப்பதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி முன் அறிவிப்பும் இன்றி திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அந்த பள்ளி ஆசிரியர் 16 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் அதிர்ச்சியடைந்த கல்வி அதிகாரி பூபதி, அவர்களுக்கு கட்டாய விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருகை தந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பூபதி ஆய்வு செய்து விட்டு பள்ளி மாணவர்களுக்கு கணித வகுப்பு நடத்தினார். இந்த நிலையில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் சரியாக வருகை புரிவதில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். அதன்பின் முதன்மை கல்வி அதிகாரியான பூபதி அந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து, அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வியில் இருப்பதால் அதிகம் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.