வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி பெண் தமிழக முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள மேற்கு தெருவில் காதர் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாஜிதா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்பு காதர் மைதீனுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனர். இதனையடுத்து காதர் மைதீன் தனக்கு ஒட்டகம் மேய்க்க தெரியாது என்று கூறிய பின்பும் அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். மேலும் சரியான உணவு மற்றும் சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார்.
இதனையறிந்த ஷாஜிதா பானு வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தனது கணவரை மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் இருந்த காதர்மைதீன் கடந்த 6 மாதமாக தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், சூழ்நிலையையும் வீடியோவாக வெளியிட்டார்.
அந்த வீடியோவில் எண்ணை கத்தாரில் ஒட்டகம் மேய்க்க சொல்லி கொடுமை படுத்துவதாகவும், கயிற்றில் கட்டி வைத்து அடிக்கின்றனர். இதனால் என் கால் முறிந்துள்ளது என கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஷாஜிதா பானு எனது கணவரை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.