பியூதான் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்றுகொண்டிருந்த ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
மத்திய மேற்கு நேபாளத்தில் உள்ள பியூதான் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்த ஜீப் திடீரென சாலையின் வளைவில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல் ஆய்வாளர் பெனி பிரசாத் கைரே கூறியதாவது “இந்த விபத்தானது அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது. மேலும் ஜீப் மணமகள் வீட்டிற்கு செல்லும் போது இந்த விபத்து நடந்திருக்கிறது. அந்த ஜீப்பில் மாப்பிள்ளை இருந்தாரா என்பது தெரியவில்லை. இதனையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்கள் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என்று அடையாளம் காண முடிந்தது” என்று அவர் கூறினார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.