சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வீரகனூர் பகுதியில் பாஸ்கர்(41) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது தம்பி வெள்ளையசாமியின் திருமணத்தின்போது 4 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை பாஸ்கர் திருப்பி தருமாறு கூறி வந்தார். இதற்கிடையே வெள்ளையசாமி குடும்பத்தின் பூர்விக நிலமான 50 சென்ட் விவசாய நிலத்தை பாஸ்கருக்கு தெரியாமல் விற்க முயன்றுள்ளார்.
இதனை அறிந்த பாஸ்கர் வெள்ளையசாமியை தட்டி கேட்டுள்ளார். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாஸ்கர் தம்பி என்றும் பாராமல் வெள்ளையசாமியை அரிவாள் எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வெள்ளையசாமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொல்லிமலை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாஸ்கரை கைது செய்துள்ளனர்.