Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோய் பாதித்த சிறுவன்… “உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்”… குவியும் பாராட்டுக்கள்.!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பலரும் பாராட்டிவருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு துரை அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிப்படைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறுவனை மேல் சிகிச்சைகாக சென்னையிலுள்ள கேன்சர் சென்டருக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். சிறுவனை சென்னை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்பட்டுள்ளது. ஆனால், பணம் இல்லாததால் பெற்றோர் செய்வதறியாது நின்றுள்ளனர். இந்நிலையில், துரை அறக்கட்டளை மகேந்திரன் குறித்து சிறுவனின் உறவினர் கேள்விப்பட, அவரை தொடர்புகொண்டு குடும்ப சூழலை எடுத்து கூறியுள்ளார். இதையடுத்து, சிறுவனுக்கு உதவும் வகையில் மகேந்திரன் ஆம்புலன்ஸை இலவசமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு புறப்பட்டு இன்று காலை 8 மணியளவில் சென்னை அடையாறு கேன்சர் சென்டருக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் வந்தடைந்தார். மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபாய கட்டத்தை அவர் தாண்டியுள்ளார். உரிய நேரத்தில் சிறுவனை காப்பாற்ற உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகேந்திரனுக்கு சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். இவருக்கு நாமும் பாராட்டுகளை தெரிவிப்போம்.

இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகேந்திரன், “எனக்கு சொந்தமாக நான்கு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை அவ்வப்போது மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதுடன், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்” என்றார்.

Categories

Tech |