நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவரை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் போத்திராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று வடுகப்பட்டியில் உள்ள பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்கரை காவல்துறையினர் போத்திராஜனின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போத்திராஜனின் நெருங்கிய நண்பரான வீரமுத்துவை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மை வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் போத்திராஜனும், வீரமுத்துவும் இணைந்து வடுகபட்டி பாலம் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வீரமுத்து போத்திராஜனை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் போத்திராஜன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் வீரமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.