கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரிட்டனில் பிரதமர் இல்லத்தில் விதிமீறல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசின் உயர் அதிகாரிகள் 4 பேர் ராஜினாமா செய்தது அந்நாட்டின் பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இந்த விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதையடுத்து இது தொடர்பாக கடந்த திங்கள் அன்று அரசு விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கையின் படி பிரிட்டனில் கடந்த 2 ஆண்டுகளாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் மதுபான விருந்துகள் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்தில் நடைபெற்றுள்ளன. இந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அரசு கூறி வந்த நிலையில் இந்த மதுபான விருந்து நிகழ்ச்சியில் சிலர் நடந்துகொண்ட விதத்தை எவ்விதத்திலும் நியாயப்படுத்த கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் இந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரிய நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரதமரின் நீண்டகால கொள்கை வகுக்கும் குழு தலைவரான முனிரா மிர்ஷா , பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகி டேன் ரோஷன்ஃபீல்ட், முதன்மை தனிச் செயலர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் மற்றும் தகவல்தொடர்பு இயக்குனர் ஜாக் டோய்லே ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து பிரிட்டனின் பிரதமர் தலைமை குறித்து ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியில் கேள்விகள் அதிகரித்த நிலையில் இந்த உயர் அதிகாரிகள் 4 பேர் ராஜினாமா செய்தது அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.