தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. அதோடு மட்டுமில்லாமல் குரூப்-2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் குரூப் 1 தேர்வு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதில் தமிழகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான துறை தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை மற்றும் 7, 8 ஆகிய தேதி வரை புதிய நடைமுறையாக ஆன்லைன் மூலம் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் சர்வே மற்றும் வருவாய் துறைகளுக்கு பிப்ரவரி 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
மேலும் கணினி மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு அனைத்து விடைத்தாள்களும் நேர்மையான முறையில் திருத்தம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலமாக நடைபெற உள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மே மாதம் குரூப்-1 தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.