Categories
அரசியல்

அரசு போட்ட தடை…. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் மாணவிகள்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது.

இருப்பினும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு மூன்று வார காலங்களாக கல்லூரிக்குள் நுழையவும், தேர்வு எழுதவும் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், “இந்து மதத்தில் காவி உடை அணிவது கட்டாயம் என்றால் இந்து மாணவர்களும் காவி உடை அணிந்து வரட்டும்.

அதேபோல் பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் மதத்தில் கட்டாயம். அது எங்களுடைய உரிமை. இன்னும் தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ளது. எங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள். எங்களை தயைகூர்ந்து தேர்வுக்கு அனுமதியுங்கள்” என்று கல்லூரி நிர்வாகத்திடம் கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பள்ளி, கல்லூரிகளில் சீருடையை தவிர வேறு எந்த வண்ணத்திலும் மாணவர்கள் ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா “பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த செயல்களுக்கு எந்த இடமும் கிடையாது. மாணவ, மாணவிகள் “இந்தியர்” என்ற மனநிலையில் ஒன்றுபட வேண்டும். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு எழக்கூடாது என்பதற்காக தான் பள்ளி, கல்லூரிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஹிஜாப் மட்டுமின்றி காவி, பச்சை உள்ளிட்ட வேறு எந்த வண்ணங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் ஆடைகள் அணியக்கூடாது. எனவே சீருடையாக எது அறிவிக்கப்பட்டுள்ளதோ அதை தான் மாணவர்கள் கட்டாயம் அணிந்து வர வேண்டும். இது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். இது குறித்த உத்தரவு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வருகின்ற 8-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |