மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமலிங்கபுரம் அம்பேத்கர் நகரில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கம் என்ற மகன் உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மாணிக்கம் சித்தப்பா முறை என கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் மாணிக்கம் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அச்சத்தில் அந்த மாணவி அலறி சத்தம் போட்டுள்ளார். அப்போது சத்தம் போட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி மாணிக்கம் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என மாணிக்கம் அவரை மிரட்டியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.