பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கற்கள் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி சத்தி பண்ணாரி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றுவிட்டது. இந்நிலையில் நஞ்சன்கூடு பகுதியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி குளிர்பானங்கள் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைதடுமாறி பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கிளீனர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். லேசான காயங்களுடன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த சிவகுமாரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.