புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவியின் சாதனை உலக கலாம் நிறுவனம் சான்றிதழ் அளித்து பாராட்டியுள்ளது.
புற்றுநோய் பற்றிய போதிய அறிவின்மை இல்லாமல் பலரும் இருப்பதை இன்றளவிலும் காணமுடிகிறது. அதனால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் .
முன்னொரு காலகட்டத்தில் புற்றுநோயை குணப்படுத்த மருந்துகள் இல்லாத நிலையில், தற்போது பலரும் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வாணிஸ்ரீ கலந்து கொண்டார். இவர் பத்து மணி நேரத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோயை குறிக்கும் ரிப்பன் வடிவத்தினை 40×20 என்ற வடிவத்தில் சாதனை படைத்துள்ளார். இதனை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி காண்போரை மிகப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. பலரும் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி வாணிஸ்ரீ பேசியபோது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சாதனைகள் படைத்தேன் என்றும், இதனை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது போல பல விஷயங்களை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.