கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல மிக அதிகமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அந்த நேரத்தில் மக்களுக்கு பெரிய அளவில் உதவியது தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை. தமிழகம் முழுவதும் மொத்தம் 220 இலவச அமரர் ஊர்தி சேவை வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகப்படியான வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. கோவையில் அரசால் அறிவிக்கப்பட்ட155377 என்ற எண்ணுக்கு மற்ற நாட்களை விட அதிகப்படியான தொலைபேசி அழைப்புகள் வந்தன. கடந்த 2020 ஏப்ரல் மாதம் தொடங்கி 2021 மார்ச் மாதம் வரை சுமாராக 11,107 அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் 11 ஆயிரத்து 35 உடல்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.