மின்சாரம் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் காளி குப்பம் பகுதியில் மீனவரான சுப்பையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு அலுமினிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்து அதனை ஆப் செய்யாமல் சூடாகி விட்டதா என்று கை வைத்து பார்த்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி சுப்பையன் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்பையனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.