வீட்டை சேதப்படுத்திய லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் சகாய நகர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கன் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அருள் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டின் இரும்பு கேட் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் வீட்டில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. இதனை அறிந்த அருள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான லாரியில் நகராட்சி சார்பாக சகாய நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக எம் சாண்ட் மணல் மற்றும் ஜல்லி கற்களை ஏற்றி வந்துள்ளது. அந்நேரம் திடீரென பிரேக் பிடிக்காமல் அருள் வீட்டின் இரும்பு கேட் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது காவல்துறையினர் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்த கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டிடத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் லாரியை அங்கிருந்து அவர்கள் விடுவித்துள்ளனர்.